ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
 மலர் -23 துந்துபி வருஷம்: செப்டம்பர், அக்டோபர் 1982 இதழ் 1&2
பெரியவர்கள்

பெரியவர்கள் என்றால் தமிழ் நாட்டில், விசேஷமாகப் பக்தகோடி மக்களிடையில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். அவர் தாம் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், புதுக்கோட்டையிலிருந்து இருபத்தைந்து மைல்களுக்கு அப்பாலிருக்கும் இளையாத்தான்குடி என்னும் சிறிய ஊர் இவ்வாண்டில் சாதுர்மாஸ்யம் என்று கூறப்படும் நான்கு பக்ஷங்களை அவர்கள் அங்குத் தங்கிக் கழிக்கும் நற்பேற்றைப் பெற்றிருப்பதுமன்றி நவராத்திரி பூஜையையும் அவர்கள்அங்கு நடத்தும் பெருமையைப் பெற்றது.  
பிலவ ஆண்டு புரட்டாசி மாதம் சுக்லபக்ஷம் சிரவண துவாதசித் திதி நான் கிடைத்தற்கரிய பெரும் நற்பேற்றைப் பெற்ற நன்னாளாக என் வாழ்க்கையில் என்றும் விளங்கும். அன்று பெரியவர்கள் காலை பூஜை முடித்துத் தீர்த்தமளிக்கும் சமயத்திற்கு என் நண்பரும் நானும் அங்குப் போய் சேர்ந்தோம். தீர்த்தத்தைப் பணிவுடன் பெற்றுக்கொண்டு சிறிது நேரம் கழித்து அவர்கள் வீற்றிருந்த குடிலுக்குச் சென்றோம்.
மண் தரையில் விரித்திருந்த சிறுத்தைத் தோலாசனத்தின்மீது செம் பொற் ஜோதி ஒன்று வீற்றிருந்தது. செய்யன், சிவந்த ஆடையன், மாசற இமைக்கும் உருவினன், ஊன்கெடு மார்பின் என்பெழுந்து இயங்கும் யாக்கையன், நன் பகல் பலவுடன் கழிந்த உண்டியன், காமமொடு கடுஞ்சினங் கடிந்த காட்சியன், துனி இல் காட்சி முனிவரன்.
பத்துப் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஒல்லியான சிறுவனின் உடல் அவர்களுடைய உடலைவிடச் சற்றுப் பருமனாகவே இருக்கும் மடக்கு ஜப்பான் விசிறி போல மடிப்பு விழுந்த வயிறு, உடலுக்கு ஏற்ற கால்கள், மாசற்ற திருப்பாதம், பூமியில் தோயாத தேவ்ரின் பாதமோ, துன்பம் அறியாது செல்வக் குடும்பத்தில் வளரும் இளம்பெண்ணின் அடியோ, அங்குச் சிதறிக் கிடந்த தாமரை மலரிதழ்களைப் பழிப்பதற்கென்றே பிரமன் படைத்த அருள்மலரோ என்று வியப்புறுத்தும் சின்னஞ்சிறிய திருவடிகள். இத்தனைக்கும் அவை நூறாயிரம் மைல்கள் நடந்து உலகளந்த திருவடிகள். தம் மலங் கழுவ வந்து சாரும் பக்தகோடிகள் கண்ணீரும் பன்னீரும் கொண்டு கழுவித் கழுவித் துலங்கும் திருவடிகள், பெருந்தண் கண்ணிமிலைந்த சென்னியன். எம்பெருமான் மாணிக்கவாசகர் “முத்தா, உன்றன் முகவொளி நோக்கி முறுவல்நகை காண, அத்தா, சால ஆசைப்பட்டேன்” என்று  இறைஞ்சிய முறுவல் எவ்வண்ணம் இருக்குமென்று மெய்வண்ணம் காட்டும் திருமுகம், பேசுவதற்கே இறைவன் நாவைப் படைத்திருப்பதால் நாவின் மற்ற வேலைகளைத் திறம்பட இயற்றும் திருக்கரங்கள். அருள் நோக்கன்றி வேறு நோக்குப் பயின்றறியாத கருணை வெள்ளச் சுனைகள்.
என் தோழர் என்னை அறிமுகப்படுத்தும் வகையில், “நாங்கள் கல்லூரியில் சேர்ந்து படித்த காலத்திலிருந்து நண்பர்கள்” என்று கூறி என் பெயரை மட்டும் சொன்னார். வேறொன்றும் சொல்லவில்லை. உடனே முறைப்படி அஷ்டாங்க தண்டனிட்டு நின்றோம். திருக்கரங்கள் உட்காரும்படி பணிக்க அப்படியே செய்தோம் . அச் சிறு ஊரிலும் தில்லி கல்கத்தாவிலிருந்தும், சென்னை மாகாணத்தின் ஊர்கள் பலவற்றிலிருந்தும் பக்தர்க்ள் சாரை சாரையாக வந்து பணிந்து சென்றவாறு இருந்தார்கள். கண்கள் அருள் பொழிய, கரம் அபயமளித்து ஆசி கூற, புன்முறுவல் துன்பம் துடைக்கப் பலர் செலவு பெற்றுச் சென்றனர். சிலருக்கு இன்சொல் அமுதும் கிடைத்தது. தியானத்தில் உள்நோக்காய், ஸ்ரீ ராமகிருஷ்ண பகவான் தமக்கே அமைந்த தனிச்சிறப்பு முறையில் உவமையாகக் காட்டும் அடை காக்கும் கோழியின் அரை விழிப்பைப் போலக் கண்டும் காணாத தன்மையனவாய் உள்ளொளியில் திளைக்கும் கண்கள் சட்டென மலர்ந்து அருள் நோக்காய் விரிவதைக் கண்டவரே அவை பொழியும் அமைதிப் பேரின்ப வெள்ளத்தை அறிவார்கள்.    
பெரியவர்கள் சமயப் போர்களையும் மொழிப்பூசல்களையும் களையும் திருவுள்ளத்துடன் துவக்கிவைத்து வளர்த்து வரும் திருப்பாவை திருவெம்பாவை ஓதல், மகாநாடு கூட்டல் முதலிய அரும்பணிகள் உலகறிந்தனவே. ஆனால் கோவில்களில் மந்திர புஷ்பத்திற்குப் பிறகு அவ்வவ் தலத் திருமுறைகளை அர்ச்சக்ர் ஓதி வழிபாடு நடத்த வேண்டுமென்பது அவர்களுடைய திருக்குறிப்பு என்பதை அன்று அவர்கள் ஒரு பக்தரை அப்படி அவருடைய ஊரில் செய்விக்கும்படி பணித்தபோது தான் கேட்டறிந்தேன், மேலும் அவரை, “அத்தலத்திருமுறை ஏதேனும் தெரியுமா?” என்று ஆசார்யர்கள் கேட்டபோது அவர் “பித்தா, பிறைசூடீ” என்று தொடங்கி முதற்பாட்டுடன் நிறுத்தியதும், “மேலே தெரியாதோ?” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “பதிகம் முழுவதும் பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டுக் கோவிலின் சுவரில் பதிக்கப்பட்டிருக்கின்றது” என்று கூறியதைக் கேட்டு முறுவல் செய்து, “கல்லில் இருந்தால் போதாது, உன் மனதில் இருக்க வேண்டும். பதிகம் முழுவதையும் மனப்பாடம் செய்துகொள்” என்று பெரியவர்கள் திருவாய் மலர்ந்தருளினாகள்.    
பிறகு என்னைப் பார்த்து, “ஞாயிறு திங்கள், செவ்வாய்……. அவை நல்ல, நல்ல என்ற பதிகம் பாடமோ?” என்று வினவி, அதை ஓதி வரும்படி பணித்தார்கள். உலகத்தின் உள்ளத்தைக் கலக்கி வரும் 1962 பிப்ரவரி 4-ஆம் தேதியன்று நிகழ இருக்கும் கோள் சங்கமத்தைத் திருவுள்ளத்தில் கொண்டுதான் இவ்வண்ணம் பணித்தார்களோ, அறியேன். அன்றுதொட்டு நாள்தோறும் அப்பதிகத்தை ஓதி வருகிறேன்.
என் பெயரை மட்டும் என் நண்பர் கூறினாரென்று நான் முதலில் சொன்னேன் அல்லவா? அதைக் கேட்டதும் சட்டென்று என் புறம் திரும்பி, “பத்து எட்டு வருஷங்களாக நானே உன்னை வரவழைத்துப் பார்க்க வேண்டுமென்றிருந்தேன். நீயே வந்துவிட்டாய்“ என்று அவர்கள் கூறியபோது என் வியப்புக்கு எல்லையே இல்லை. அவர்களின் அருட்சிந்தையையும் ஈடற்ற ஞாபக சக்தியையும் என்னால் எப்படி அளவிட முடியும்? ஆகையால், அவர்கள் வேறு யாரையோ நினைத்துக் கொண்டு இவ்வாறு கூறுகிறார்களென்று நான் எண்ணினேனென்றால் யாரும் என்னைக் குறை கூற மாட்டார்கள். ஆனால் அப்படி அன்று என்பது உடனே தெளிவாயிற்று. பதினோர் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சங்கம் வெளியிட்ட ஓர் ஆங்கில நூலின் ஆசிரியரின் பெயரையும் அவருடைய வாழ்க்கையையும் அந் நூலையும் ஐயத்திற்கு இடமின்றிக் குறிப்பிட்டு, அப்பணியில் நான் கொண்ட பங்கையும் எடுத்துரைத்து, அந்நூலின் தட்டச்சுப்படி அச்சங்கத்தின் கைக்கு வருவதற்கு முன் அவர்கள் கையில் பல ஆண்டுகள் இருந்ததாகவும், பிறகு அந்நூல் வெளிவந்த போது அதைப் பன்முறை படித்து இன்புற்றதாகவும் திருவாய் மலர்ந்தருளி அடியேனை ஆட்கொண்டதை என் சொல்வேன்! அந்நூலில் என் பெயர் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் இங்குக் கூறவேண்டும். அந்நூல் 1600 மைல்களுக்கு அப்பால் வெளியிடப்பட்டது. அச்சமயத்தில் நான் அதன் பிரதி ஒன்றை ஆசார்ய ஸ்வாமிகள் அவர்களுக்கு அனுப்பிவைத்த்தைக்கூட மறந்துவிட்டேன். என் சொல்வேன் என் சிறுமையை! என் சொல்வேன் பெரியவர்களின் பெருமையை!         

நெடுநேரங் கழித்துப் பெரியவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பிய போது நடுப்பகல் பூஜையைப் புதுப் பெரியவர்கள் செய்துகொண்டிருந்தார்கள், அங்கு சென்று, பூஜை முடிந்தபின் பிரசாதம் பெற்றுக்கொண்டு, பிறகு அவர்களைத் தரிசிக்க அவர்கள் இருந்த குடிலுக்குச் சென்றோம். மிகவும் இனிய முறையில் எங்களுடன் உரையாடி மகிழ்வித்தார்கள். அவர்களுடைய திருமுகத்தில் விளங்கும் சாந்தமும் தெய்வீக ஒளியும் பக்தகோடிகளுக்கு நம்பிக்கையை ஊட்டிச் சத்தியமே என்றும் வெல்லுமென்ற உறுதியைப் பிறப்பிக்கின்றன என்றால் மிகையாகாது.       

Home Page